கோடை கால சரும பராமரிப்பு

கோடை கால சரும பராமரிப்பு

கோடைக்காலம் தொடங்கிய உடனேயே பலரும் மனதளவில் அச்சம் கொள்வது கோடையின் வெப்பமும் அதனால் ஏற்படும் பல சரும பாதிப்புகளும் குறித்து தான். சிறுகுழந்தைகள், நடுத்தர வயதினர் மற்றும் வயதானோர் உட்பட அனைத்து வயதினரும் இந்த கோடையின் வெப்பத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
புவியியல் அமைப்பின் அடிப்படையில் நமது இந்திய நாடு ஒரு வெப்ப மண்டல பிரதேசமாகவே கருதப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலமாக இருந்தாலும் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

ஆனால் தற்போது புவிவெப்பமயமாதல் போன்ற காரணங்களால் வெயிலின் தாக்கம் கோடைக்காலத்தின் தொடக்கம் முதலே அதிகப்படியாக உள்ளது. கடந்த சில வருடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரையும், சில நேரங்களில் அதற்கு மேலும் கூட வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த அதிகப்படியான வெப்பநிலை நமது உடல் நிலையை வெகுவாக பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக பல சரும பாதிப்பு கோடைக்காலத்தில் அதிகமாக தோன்றுகின்றது.

கோடைக்காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிப்பதால், அந்த வெப்பநிலை மாற்றம் நமது உடலை பாதிக்காத வகையில் இயற்கையாகவே வியர்வை சுரப்பு அதிகமாகிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் நடுநிலையாக பராமரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த அதிகப்படியான வியர்வையுடன் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள்  சேர்ந்து துர்நாற்றம் மற்றும் அரிப்பு  தோன்றுகிறது. மேலும் எண்ணை பசை சருமம் உடையவர்களுக்கு வியர்வையுடன், எண்ணை சுரப்பும் அதிகப்பட்டு, அவை இரண்டும் சேர்ந்து எண்ணை சுரப்பிகளை அடைப்பதால் முகப்பரு  தோன்றுகிறது.

அடுத்ததாக, கோடைக்காலத்தில் தோன்றும் முக்கியமான சரும பிரச்சினை வேர்க்குரு. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இவை சீழ் சேர்ந்த வேனல் கொப்புளங்களாக மாறி வேதனை மற்றும் வலியை தருகின்றன.

மேலும் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் உடலின் நீர்சத்து குறைகிறது. இதனால் சோர்வு, தோல் வறட்சி, அரிப்பு , மனக்குழப்பம் , மயக்கம் , தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.

மேலும் வெயிலில் அதிகமாக செல்வதால் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் தோல் பாதிக்கப்பட்டு, தோலில் வெப்ப புண், தோல் கருமையாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான வியர்வையினால் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளான படர்தாமரை , தேமல் போன்ற சரும நோய்கள் ஏற்படுகின்றன.

கோடை வெயிலோடு சில நேரங்களில் கோடை மழையும் சேர்ந்து கொள்வதால் வெப்பமும் குளிர்ச்சியும் சேர்ந்த இந்த புறச்சூழ்நிலை ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ என்பதற்கு இணங்க, நம் உடலிலும் பித்தத்துடன் கபம் சேர்ந்து உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் சின்னம்மை போன்ற வைரஸ் தொற்று நோய்கள் உடலில் தோன்றுகின்றன.

நமது அன்றாட வாழ்வில் சில உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமும், சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமும் மேலே கூறப்பட்ட கோடைக்கால சரும பாதிப்புகளான வேர்க்குரு, வேனல் கொப்புளம், முகப்பரு , தேமல், படர்தாமரை, தோல் வறட்சி, அரிப்பு, வெப்ப புண் , வெயிலினால் தோல் கருமையடைதல், சின்னம்மை போன்றவற்றில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம்.

தினமும் 2 முறை குளிப்பது நல்லது. இதன் மூலம் உடலின் வியர்வை நாற்றம் நீங்குவதோடு கிருமிகளின் தொற்றும் நீக்கப்படுகிறது. குறைந்தது 2&- 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது நல்லது. இதனால் உடலின் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.

மேலும் ஒரு சிறு துண்டு கற்றாழையை தோல் சீவி அதன் சதை பகுதியை  நன்றாக நீரில் கழுவி பின் தோலில் தேய்ப்பதன் மூலம் தோல் வறட்சி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

முகத்தினை அடிக்கடி நீரில் கழுவுவதன் மூலமும், எண்ணையில் பொரித்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் முகப்பரு வராமல் தடுக்க முடியும்.

 சந்தனத்தை தண்ணீரில் கலந்து வேர்க்குருவிற்கு பூசலாம். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வியர்வையின் காரணமாக படர்தாமரை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே பருத்தியாலான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது சிறந்தது.

காபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பானகம், நன்னாரி சர்பத் போன்ற பானங்களையும், வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழம், நுங்கு போன்ற நீர்ச்சத்துள்ள பழ வகைகளையும், மேலும் சருமத்திற்கு பாதுகாப்பு தரக்கூடிய பப்பாளி, கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்றவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் மஞ்சள் தேய்த்து குளிப்பது நம் தென்னாட்டு பெண்மணிகளின் வழக்கம். அவ்வாறு குளிப்பதனால் வியர்வை, கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள் நீங்கும் என நமது மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

இதை தவிர சோப்பிற்கு பதிலாக நலங்கு மாவினை பயன்படுத்தலாம் என நம் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. நலங்கு மாவில் பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலிக்கிழங்கு, சந்தனம் போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது. சோப்பிற்கு பதிலாக இதனை பயன்படுத்தும் போது, தோலை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. உடல் துர்நாற்றத்தை நீக்குகிறது.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய நேரமான மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை நேரடியாக வெயில் படுமாறு வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வாரத்திற்கு 2 முறை எண்ணைய் குளியல் செய்வதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். சருமம் பளபளப்பு பெறும். இருப்பினும் ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உடையோர் மருத்துவரின் ஆலோசனைப்படி எண்ணைய் குளியல் செய்வது நல்லது.

மேலும் உணவில் உளுந்து, அரைக்கீரை, பருப்பு கீரை, கீரைத்தண்டு, பறங்கிக்காய், புதினா, புடலங்காய், பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி, மாதுளை, வெண்டைக்காய், வெந்தயக்கீரை போன்றவற்றை கோடை காலத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இவை இயல்பாக உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரும் உணவுப் பொருள்கள். இவை கோடையின் வெப்பத்தால் உடலில் ஏற்படும் பல சரும நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

கடந்த சில வருடங்களாக கோடை காலத்தில் வெயில் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உடலின் நீர்ச்சத்து இழப்பே ஆகும். எனவே உடலின் தேவைக்கு ஏற்ப நீர் அருந்துதல், மேற்கூறிய வழிமுறைகள் மற்றும் உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தையும் நமது உடலினையும் பாதுகாத்து நலமோடு வாழலாம்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: