“ஆர் எஸ் எஸ்” உருவான வரலாறு..!!

“ஆர் எஸ் எஸ்” உருவான வரலாறு..!!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது.

இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவியவர்கள் கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவர்.

சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி “இந்து” என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதாகும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது.

இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.

ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி பாரதீய ஜனதாக் கட்சி ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது.

ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர் எஸ் எஸ் கிளைக்குச் (ஷாகா) (அடிப்படை அலகு) சென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது.

இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில் லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது.

குரு பூர்ணிமா அன்று மட்டும் உறுப்பினர்கள் தரும் குரு காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்கால தலைவரைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அமைப்பின் பொதுக்குழு புதிய தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் பதவி கருதப்படுகிறது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி சங்கப் பரிவார் எனப்படும் அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கெடுப்பர்

தேசியத் தலைவர்கள் (Sarsanghchalaks)
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவராக இருப்பவரின் முடிவின்படி, வருங்காலத் தலைவர் (Sarsanghchalak) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவர்கள்

கேசவ பலிராம் ஹெட்கேவர் (1925–1930) மற்றும் (1931–1940)
இலட்சுமன் வாமன் பரஞ்பே (1930–1931)
எம். எஸ். கோல்வால்கர் (1940–1973)
மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (1973–1993)
ராஜேந்திர சிங் (1993–2000)
கே. எஸ். சுதர்சன் (2000–2009)
மோகன் பாகவத் (21 மார்ச் 2009 முதல் – தற்போது வரை)
பொதுச் செயலாளர்கள் (சர்காரியவா)

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாக்பூரில் கூடி, பொதுச் செயலாளர் எனும் சர்காரியவா பதவிக்கு ஒருவரை தேர்வு செய்கின்றனர்.

மோகன் பாகவத் – 2000 – 2009
சுரேஷ் ஜோஷி – 2009 – 2021
தத்தாத்ரேயா ஹோசாபலே – 2021 – தற்போது வரை

சங்கப் பரிவார்

சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகளான ராஷ்டிரிய சேவிகா சமிதி, பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிசத், துர்கா வாகினி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், விவேகானந்த கேந்திரம், இந்து இளைஞர் சேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய மஸ்தூர் சங்கம், ராம ஜென்மபூமி அறக்கட்டளை, பாலகோகுலம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், சேவா பாரதி, பாரதிய கிசான் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம் மற்றும் பாரதிய ஆய்வு மையம். விவேகானந்த கேந்திரம் சிவா சேனா ஹனுமன் சேனா சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும் இயங்குகின்றன.

ஆர் எஸ் எஸ்-க்கு தடை..!!

ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் அரசு அறிக்கை வெளியானது.இதில், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர்.

அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது.

1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார்.

ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கம்

“இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்” என்பது அந்த நிபந்தனைகளில் சில.

ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும். அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது.

Leave a Reply