தமிழகத்திற்கு “லுலு மால்” வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் நூதன போராட்டம்..!!

தமிழகத்திற்கு “லுலு மால்” வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் நூதன போராட்டம்..!!

கோவை: தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் அரசு முறை வெளிநாடு பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 24-ந் தேதி இரவு துபாய் சென்றார். துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துவைத்த அவர் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன நிர்வாக அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதன்முறையாக லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024 ஆம் ஆண்டு சென்னையில் அதன் முதல் “வணிக வளாகம்” தொடங்கப்படும் என்றும், கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் முதல் “ஹைப்பர் மார்க்கெட்” இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் லுலு மால் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அருண்குமார் தலைமையில், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு கடை கடையாக சென்று லுலு மால் வருவதால் சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் வணிகர்களின் நிலை கேள்விக் குறியாகும் என்றும் தமிழ்நாட்டில் லூலூ மால் வருவதை தாங்கள் எதிர்க்க வேண்டும் என வணிகர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அருண்குமார் கூறுகையில்,

தமிழ்நாட்டில் லுலு மால் வருவதை வணிகர்கள் ஆகிய நாங்கள் எதிர்க்கிறோம், தமிழகத்தில் லுலு மால் செயல்பட்டால் சிறு குறு வணிகர்களின் நிலைமை மிக மோசமாகும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வரும் வணிகர்களுக்கு இந்த லுலு மால் தமிழகத்திற்கு வருவது மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்.

ஆகையால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று லுலு நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

அமேசான் ஃப்லிப்கார்டு போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கும் டி மார்ட், ரிலையன்ஸ் மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும், கோவையில் தொடங்கிய எங்களது சுதேசி பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...