வெண்ணிலா வாசனை கொண்ட ருசியுள்ள நீல நிற ஜாவா வாழைப்பழங்கள்!!

வெண்ணிலா வாசனை கொண்ட ருசியுள்ள நீல நிற ஜாவா வாழைப்பழங்கள்!!

நீல ஜாவா வாழைப்பழங்கள் ஐஸ்க்ரீம் வாழைப்பழம் என்றும் பிஜியில் ஹவாய் வாழைப்பழம் என்றும், பிலிப்பைன்ஸில் க்ரை என்றும், அமெரிக்காவில் செனிசோ என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த வாழைப் பழம் சாப்பிடுவதற்கு ஐஸ்கிரீம் போன்ற சுவையை கொண்டிருக்குமாம். கூடவே வெண்ணிலா சுவையும் கொடுக்கும்.

இதை சாப்பிட்ட ஒரு சிலர் இது பெர்ரி அல்லது ஆப்பிள் பழத்தின் சுவையை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நல்ல ஒரு நறுமணத்தோடு இந்த வாழைப்பழம் இருக்கும். இந்த வாழைப்பழம் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது.

தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இரண்டு வகையான வாழைப்பழங்களான மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்குமினாட்டாவின் கலப்பினம் இது.

இந்த நீல ஜாவா வாழைப்பழங்கள் 15 முதல் 20 அடி உயரம் வரை வளரும். அதிக குளிர்ச்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. இந்த நீல ஜாவா வாழைப்பழங்கள் 18லிருந்து 23 சென்டிமீட்டர் நீளம் கொண்டது.

இந்த வாழை மரம் நடவு செய்த 15 லிருந்து 24 மாதங்களில் பூ வெளிவர ஆரம்பிக்கும். 115 லிருந்து 150 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யலாம். இந்த வாழைப்பழத்தின் தோல் மட்டும் இல்லாமல் பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருக்கும் என சொல்வார்கள். ஆனால் இது உண்மை இல்லை. இந்த பழம் முதிர்ச்சி அடையும் பொழுது மஞ்சள் நிறமாக மாறும்.

உள்ளே இருக்கும் பழமும் பார்ப்பதற்கு சாதாரண வாழை பழங்களைப் போலவே இருக்கும். இது ஹவாய் மற்றும் பிற பசிபிக் தீவுகளிலும் இயற்கையாக வளர்கிறது. இந்த வாழைப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்துக்களும் அதிகம் உள்ளது. இந்த நீல நிற ஜாவா வாழைப்பழங்களில் மற்ற வாழைப்பழங்களை போலவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது.

இந்த வாழைப்பழத்தில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி6, மாங்கனீசு, வைட்டமின் சி, தாமிரம், பொட்டாசியம், பாந்தோத்தேனிக் அமிலம், மக்னீசியம், ரிபோஃப்ளேவின், ஃபோலேட், நியாசின் மற்றும் சிறிய அளவில் இரும்புச்சத்து, தியாமின், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

இது மற்ற வாழைப் பழங்களைப் போலவே உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் இதில் கலோரிகள் குறைவு. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது செரிமானத்தை பாதுகாக்கிறது.

இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மூலநோய், வயிற்றுப்புண்கள், இரைப்பை உணவுக்குழாய் பிரச்சினைகள் போன்ற பல்வேறு செரிமான கோளாறுகளை வர விடாமல் செய்கிறது.

இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இது நம்முடைய செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Leave a Reply