மகாபலேஸ்வரர் கோவில் மேற்கு வாசல் ரத வீதியில் பக்தர்கள் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை !!

மகாபலேஸ்வரர் கோவில் மேற்கு வாசல் ரத வீதியில் பக்தர்கள் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை !!

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கோகர்ணா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.

இது பாரம்பரிய திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் அரபிக்கடலை நோக்கி அமைந்துள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் ஆண் பக்தர்கள், மேலாடை இன்றி அதாவது சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மகாபலேஸ்வரரை தரிசனம் செய்ய செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு தான் ெசல்கிறார்கள்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கோவில் அமைந்துள்ள மேற்கு வாசல் ரத வீதியில் பக்தர்கள் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்றால் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் சென்றாக வேண்டும். சுற்றுலா வருபவர்களும் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் கடற்கரைக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பனியன் உள்ளிட்ட அரைகுறை ஆடையுடன் தான் சென்று வருகிறார்கள்.

தற்போது மேற்கு வாசல் ரத வீதியில் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply