ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள்…. இந்து முன்னணிதலைவர் ஆவேசம் ..

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள்…. இந்து முன்னணிதலைவர் ஆவேசம் ..

சென்னை :

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு புதிய மடாதிபதி நியமிக்கும் வரை, அறநிலையத்துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளர்த்ததிலும், தமிழ்ப் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியது. அறமில்லாத துறை தமிழகத்தில் கோயில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் எடுத்துக்கொள்ளும் தமிழக அரசு, கோயில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் நலன்களில் துளியும் அக்கறை காட்டியது இல்லை.

சிதிலமடைந்த கோயில்களை சீரமைப்பதில்லை. பராமரிப்பதில்லை. எண்ணெய் விளக்குகள் கூட ஏற்ற முடியாத பல்லாயிரம் கோயில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.

அந்தக் கோயில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல், அலட்சியம் காட்டும் அறமில்லாத துறை ஆதீன மடங்களின் மீது தன் பார்வையை திருப்புவதன் நோக்கம் என்ன? கோயில் சொத்துகள் கொள்ளைபோன போதும், ஆகமங்கள் மீறப்பட்ட போதும், கோயில்களே காணாமல் போன போதும் அமைதியாய் வேடிக்கை பார்த்த அறநிலையத் துறை, ஆதீனம் பதவி விலகி விட்டார் என காரணம் காட்டி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு வேக வேகமாக செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோயில்களை எல்லாம் காட்சி பொருளாக, வணிக நிறுவனமாக மாற்றியது போதாதா? ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற அறநிலையத் துறைக்கு ஆசையோ? உடனடியாக தொண்டை மண்டல ஆதினம் மடத்திலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும். அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் அமைச்சரின் உறவினர்கள்.

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது. இல்லையென்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறநிலையத் துறையின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிட சொல்ல வேண்டும். மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply