சினிமா பாக்க 3 மணி நேரம் உக்கார முடியுது.. 2 மணி நேரம் மீட்டிங்க்ல உக்கார முடியாதா..திமுக தொண்டருக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா …

தூத்துக்குடி:
இளைஞர் அணியினர்தான் திமுகவின் சிப்பாய்கள், இந்த நாட்டையும் இனத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டியவர்கள் நீங்கள் என்று திராவிட மாடல் பயிற்சி பாசறையில் திருச்சி சிவா எம்பி பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. திருச்செந்தூரில் திமுக இளைஞர் அணிக்கு திராவிட மாடல் பயிற்சியளிக்கும் பாசறை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,
“உங்களை தயார்படுத்த வரவில்லை கூர் தீட்ட வந்துள்ளோம். இந்த இயக்கத்தின் எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த நாட்டையும் மொழியையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்கள் நீங்கள். இந்த இனத்தின் கோட்டை காவலர்களாக இருக்கப் போகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது எழுந்து சென்ற ஒரு தொண்டரை அழைத்த திருச்சி சிவா, “நீங்கள் என்ன பொறுப்பில் உள்ளீர்கள்? அங்கே எங்கும் செல்லக்கூடாது. ஒரு இடத்தில் அமருங்கள். ஒழுக்கம் வேண்டும். ஒரு சினிமாவிற்கு சென்றால் அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் கடைசி வரையிலும் அமர்ந்து அந்தப் படத்தை முழுமையாக பார்க்கிறோம்.
ஒரு 2 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் என்ன, எல்லோருக்கும் வேலை இருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள். எதற்கு நாம் இங்கு பேசிவிட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து பின்னர் வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்கு பேசுகிறோம்.
இதெல்லாம் பிழைப்பு அல்ல. நம் வாழ்க்கை. நம் இனத்தின் எதிர்காலம். இயக்கத்தின் எதிர்காலம்.” என்றார்.