முதியோர் ஓய்வூதியம் பெற லஞ்சம் கொடுக்க மறுத்த முதியவரின் பெயரை இறந்தவர் பட்டியலில் சேர்த்த கொடுமை. தாசில்தாரும் கையெழுத்திட்ட அவலம் ….

முதியோர் ஓய்வூதியம் பெற லஞ்சம் கொடுக்க மறுத்த முதியவரின் பெயரை இறந்தவர் பட்டியலில் சேர்த்த கொடுமை.  தாசில்தாரும் கையெழுத்திட்ட அவலம் ….

விழுப்புரம் :

முதியோர் ஓய்வூதிய தொகை கேட்டு விண்ணப்பித்த முதியவர் உயிரோடு இருக்கும்போதே அவர் நான்கு மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டதாக அவரிடமே அதிகாரிகள் கூறி அதிர வைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.

மரக்காணம் அருகே உள்ள கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சேகர்(63). இவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில் தனது மனைவி கெங்கம்மாளுடன் வசித்து வருகிறார்.  ஆதரவற்ற வறுமை நிலையில் வாழ்ந்து வரும் இவர் கடந்த 2021ல் மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய தொகை கேட்டு விண்ணப்பம் அளித்தார்.

விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகை சீட்டையும் அவர் வழங்கியுள்ளார். ஆனால் ஓய்வூதிய தொகைக்கான ஆணை வழங்க மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். லஞ்சம் தராததால் முதியவர் சேகர் கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேகர், நேரில் சென்று தனது மனு குறித்து கேட்டுள்ளார்.

அப்போதும் அவருக்கு உரிய பதிலை அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட ஊழியர்களிடம் ஓய்வூதிய தொகை கேட்டு தான் விண்ணப்பித்திருந்த மனு குறித்து கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் மனு அளித்த சேகர் உயிரிழந்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக சேகரிடமே தெரிவித்துள்ளனர். உயிரோடு இருக்கும் தன்னிடமே உயிரிழந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு முதியவர் சேகர் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரின் துணையுடன் ஓய்வூதிய தொகை கேட்டுதான் கொடுத்திருந்த விண்ணப்பித்ததன் நிலை என்ன என்பது குறித்து ஆன்லைனில் பார்த்துள்ளார்.

அப்போது முதியோர் உதவித்தொகை கேட்டு சேகர் விண்ணப்பம் வழங்கியது அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி சரி பார்த்ததாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த சேகர் உயிரிழந்து விட்டதால் அவரது ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகவும் மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சான்று வழங்கப்பட்ட அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கிறது.

உயிரோடு இருக்கும் போதே ஒருவர் இறந்து விட்டதாக தாசில்தார் எவ்வாறு அறிக்கை அளித்தார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இது தொடர்பாக பேசிய சேகர்,”

லஞ்சம் கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் உடனே அங்கீகரிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடன் மனு கொடுத்த பலர் லஞ்சம் கொடுத்ததால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் நிலையில் லஞ்சம் கொடுக்காத காரணத்தால் தான் உயிரோடு இருந்தும் இறந்து விட்டதாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Leave a Reply