அவர் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்.. அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய திருச்சி சூர்யா….

அவர் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்.. அண்ணாமலையை புகழ்ந்து  தள்ளிய திருச்சி சூர்யா….

சென்னை:

 பாஜக மாநில நிர்வாகி டெய்சி சரணை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய விவகாரத்தில் மற்றொரு மாநில நிர்வாகியான திருச்சி சூர்யா 6 மாதம் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை தாம் ஏற்பதாக திருச்சி சூர்யா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகளான டெய்சி சரண், திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவு செய்யப்பட்ட செல்போன் பேச்சு சமூக வலைதளங்களின் வெப்பநிலையை தகிக்க விட்டது.

இந்நிலையில் டெய்சி சரண், திருச்சி சூர்யாவை அழைத்து திருப்பூரில் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் டெய்சி சரணும் திருச்சி சூர்யாவும் சமாதானமடைந்துவிட்டதாக அறிவித்தனர். இருவரும் அக்கா, தம்பி போல பாசத்துடன் இருப்போம் என்றனர். இருவரது பேட்டியும் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிப் பொருளாகி இருக்கிறது.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் திருச்சி சூர்யாவை 6 மாதம் சஸ்பென்ட் செய்வதாக தெரிவித்திருந்தார். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பெண்களை இழிவுப்படுத்துவதை பாஜக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாஜக மாநிலத் தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்.

நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்ளை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆதலால் ஒரு மாநிலத் தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.

ஆகவே தமிழக பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடி வரும் என கூறியிருந்தார். இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதாக திருச்சி சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்.. என் மேல் தலைவர் @annamalai_k அவர்கள் எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் . மீண்டும் அவர் நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் . என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில் #அதிரடி_அண்ணாமலை என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது 71 போலீசாரை ஒரே நாளில் அண்ணாமலை டிரான்ஸ்பர் செய்த செய்தி பேப்பர் கட்டிங்கையும் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திருச்சி சூர்யா.

Leave a Reply