நடிகைகளை பற்றிஅவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு….

நடிகைகளை பற்றிஅவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர்  அவர்களிடம்  பகிரங்க மன்னிப்பு கேட்க  உயர்நீதிமன்றம் உத்தரவு….

சென்னை:

பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்ற திமுக விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் கலந்து கொண்டு பேசும்போது, பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார்..

குறிப்பாக பாஜகவிலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய 4 பேர் குறித்து தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்திருந்தார். சைதை சாதிக்கின் ஆபாச பேச்சு குறித்து அப்போதே கடுமையான கண்டனங்கள் எழுந்தன…

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பு, ‘பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் எந்த மாதிரியான மோசமான சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஆண்கள்தான் தங்களைக் கலைஞரின் சீடர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?” என்று கேள்வியை கேட்டதுடன், அந்த ட்வீட்டை, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கும் டேக் செய்திருந்தார்.

இதனிடையே, சைதை சாதிக் ஆபாசமாக பேசியது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது… அதன் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்..

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் சம்மந்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply