பொம்மைக்கு புது துணி அணிவித்து, குறத்தி ஆட்டம் ஆடி ,பாடைகட்டி செருப்பால் அடித்த மக்கள்… கிராமத்தினர் நடத்திய வினோத வழிபாடு….

பொம்மைக்கு புது துணி அணிவித்து, குறத்தி ஆட்டம் ஆடி ,பாடைகட்டி செருப்பால் அடித்த மக்கள்… கிராமத்தினர் நடத்திய வினோத வழிபாடு….

தூத்துக்குடி;

இந்தாண்டு தென்மாவட்டங்களில் தற்போது பருவமழை பொய்த்துவிட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் செக்காரக்குடி பகுதி வானம் பார்த்த பூமி. இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டு மழை பொய்த்த காரணத்தினால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,தூத்துக்குடி  மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக்குடி கிராமத்தில் கடந்த வாரம் கிராமத்தின் சார்பில் ஊர்க்கூட்டம் போடப்பட்டு மழை பெய்ய வேண்டி கொடும்பாவி கட்டி எரிக்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர்.

இதனையடுத்து இன்று செக்காரக்குடி கிராமத்தில் பருவமழை பெய்ய வேண்டி மனித உருவத்தை வைக்கோல் மற்றும் செடிகளால் செய்து, அதற்கு சட்டை அணிவித்து, பாடை கட்டி, அதை பருவமழைக்கு தடையாக இருக்கும் கொடும்பாவி எனும் மூதேவியாக பாவித்து, சாவு மேள தாளம், குறத்தி ஆட்டம் போன்றவைகளை நடத்தி அனைத்து தெருக்கள் வழியாக வந்து துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து, ஒப்பாரி பாடல் பாடி தெருக்கள் வழியாக சென்றனர்.

இறுதியில் ஊரின் வெளிப்பகுதியில் உள்ள சுடுக்காட்டில் கொண்டு இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பருவமழை பொய்க்கும் சமயங்களில் மழை பெய்ய வேண்டி பல்வேறு சடங்குகள் நடைபெறும்.

அது போல ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த சடங்கு பேசுபொருளாக ஆகியுள்ளது .

Leave a Reply