பாவங்களை நீக்கும் திருவக்கரை அருள் மிகு சந்திர மௌளீஸ்வர் கோவில் !!

பாவங்களை நீக்கும் திருவக்கரை அருள் மிகு சந்திர மௌளீஸ்வர் கோவில் !!

தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு உள்ள விழுப்புரம் மாவட்ட வானூர் வட்ட திருவக்கரை அருள்மிகு சந்திர மௌளீஸ்வர் கோவிலில் 7 நிலை ராஜ கோபுரம் பிரதானமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது.


காளிசன்னதியின் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் சன்னதி, காளிசன்னதியின் இடதுபுறம் கிளி கோபுரம் (நடு கோபுரம்), முன்புறத்தில் திருநந்தி, அதற்கு வலப்புறமாக திருகல்யாண மண்டபம் (நூற்றுக்கால் மண்டபம்) அமைந்துள்ளது. நடு கோபுரத்தினை தாண்டி உள்ளே கருவறையில் மூலவ லிங்கம். ஐந்தோ நான்கோ முகம் இல்லாமல் மாறுபட்டு மும்முகலிங்கமாக காட்சி அருளுகிறார். முன் மண்டபத்தில் இருபுறத்தில் பத்து அடி உயரத்தில் இரண்டு சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர்.

மூலவர்

மூலவர் திருப்பெயர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.சந்திரனை முடியிலே சூடியிருப்பவர் என்பது இதன் பொருளாகும். சதுரபீடத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் மூலவர் அழகிய மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான லிங்கம் அமைந்துள்ளது. மேற்குபாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை.

கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், ஆகியோரின் இலக்கியக் குறிப்புகளும் வக்கிராசுரன் முதலியோர் வழிபட்டுள்ள சான்றுகளும் கிடைக்கின்றன.

அம்பாள்

அம்பாள் உலகை ரட்சிக்கும் அமிர்தேஸ்வரி எனவும்,அழகுமிகு கோலம் கொண்ட வடிவாம்பிகை எனவும் வணங்கப்படுகிறாள். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

குண்டலிணி முனிவர்

கருவறையின் தென்திசையில் குண்டலினி முனிவர் எனும் சித்தர் ஜீவசமாதி உள்ளது. குண்டலினி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் நிறுவப்பட்டு உள்ளது.

வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன.

வடதிசையில் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் தனித்து மூர்த்தியாய் நின்றருளுகிறார். வரதராஜ பெருமாள் சன்னதி பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.

இதன் வடதிசையில் மேற்கு நோக்கி நவக்கிரக சன்னதி உள்ளது. அருள்மிகு வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள சன்னதிகள் அனைத்தும் நேர்நேராக அமையாமல் வக்கிரகதியில் அமைந்துள்ள கோவில் திருவக்கரை எனப்படுகிறது.

வக்கிராசுரனும் துர்முகியும்

வக்கிராசூர அரக்கன் சிவனை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்து, தவவலிமையால் சாகா வரம் பெற்றான். வலிமை பெற்றதாலே எளியாரை சீண்டும் குணம் வந்தது. தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

சிவன் திருமாலிடம் வக்கிராசூரானை சம்ஹாரம் செய்ய வேண்டினார். பெருமாளும் சூரனுடன் போரிட்டு தனது சுதர்சனத்தை வக்கிராசுரன் மீது பிரயோகித்து வதைத்தார். வக்கிராசுரனின் தங்கை துன்முகி அவனைப் போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய பார்வதிதேவியே சென்றாள்.

ஆனால் துன்முகி கருவுற்றிருந்தால் பார்வதி துன்முகியின் வயிற்றை கிழித்து, சிசுவை தனது வலதுகாதில் குண்டலமாக்கிக் கொண்டு துன்முகியை வதம் செய்தாள். வக்கிரசூரனின் தங்கையை அழித்ததால் பார்வதி இங்கு வக்கிரகாளியாக சம்ஹாரக் கோலத்தில் அருள்புரிகிறாள். வக்கிரகாளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய ‘வக்கிரலிங்கம்’ உள்ளது.

வக்கிரகாளி சம்காரம்

பண்ணியதால் ஓங்காரமாக இருந்த காளியை ஆதி சங்கரர் சாந்தம் செய்து இடதுபாதத்தில் ஸ்ரீ சக்ரராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்தாக கூறப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வக்கிரகாளியின் திருவுரு, சுடர் விட்ட பரவும் தீக்கதிர்களைக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக்கிரீடம் வலது காதில் சிசு-பிரேத குண்டலம், எட்டுத்திருக்கரங்கள் வலக்கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்த தலை மாலை. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.

இந்த சன்னதியை வலம் வர நினைப்பவர்கள் ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை – வலிய கரையையுடைய இடமாதலாலும் சங்கராபரணி நதியின் கரையாக அமைந்தாலும் வற்கரை – வக்கரை என மருவி திரு அடைமொழி சேர்ந்து திருவக்கரை ஆயிற்று.

தல மரமாக வில்வமும் தீர்த்தமாக பிரமதீர்த்தம், சந்திரதீர்த்தம், சூரியதீர்த்தம் குறிப்பிடப்படுகிறது. “வராகநதி ” யெனப்படும் ‘சங்கராபரணி ‘ ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் வாழ்ந்த மரங்கள்,அவற்றின் பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றத்தோடு இன்று கல்லாக – கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன.

மூர்த்திகள்

வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்கரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

இக்கோயிலில் பவுர்ணமி இரவு 12மணிக்கு ஜோதிதரிசனமும், அமாவாசை தினத்தன்று பகல் 12 மணிக்கு ஜோதிதரிசனமும் நடைபெறும். சிவன் கோவிலாக இருந்தாலும், காளியும் குடி கொண்டிருப்பதால் இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாகவும் புகழ்ப்பெற்று திகழ்கிறது. மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். பிரதோஷம், மாதாந்திரபவுர்ணமி, அமாவாசை, சித்ராபவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகைதீபஉற்சவம், தைபூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள் ஆகும்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வழியில், பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் திருவக்கரை உள்ளது.

Leave a Reply