ஓட்டிப் பார்ப்பதாக கூறி ரூ.14 லட்சம் மதிப்புள்ள பைக்கோடு எஸ்கேப் ஆன டிப்டாப் இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…

ஓட்டிப் பார்ப்பதாக கூறி ரூ.14 லட்சம் மதிப்புள்ள பைக்கோடு எஸ்கேப் ஆன டிப்டாப் இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…

சென்னை: 

அண்ணா நகர் ஹெச் பிளாக் 2வது தெருவில் வசித்து வருபவர் சுல்பி கராலி. தொழிலதிபரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கவாஸாகி நின்ஜா(Kawasaki நிஞ்ஜா) 1000cc என்ற உயரக இருசக்கர வாகனத்தை 14 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்.

கடந்த ஐந்து வருடமாக இந்த பைக்கை பயன்படுத்திய சுல்பி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாக தன்னுடைய விலை உயர்ந்த கவாஸாகி நிஞ்ஜா பைக்கை, எட்டு லட்ச ரூபாய்க்கு விற்பதாக இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த விளம்பரத்தை பார்த்து சுல்பியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் பைக்கை தான் வாங்க விரும்புவதாகவும், அதற்கான ஆவணங்கள் குறித்தும் கேட்டிருக்கிறார். நேற்று மதியம் தொழிலதிபரின் வீட்டிற்கு அவர் இல்லாத போது அந்த டிப்டாப் நபர் வந்திருக்கிறார்.

பைக் ஓட்டி பார்க்க வேண்டும் என தொழில் அதிபரின் வீட்டிலிருந்த வேலை ஆட்களிடம் கேட்டபோது, உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தொழிலதிபரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு தொழில் அதிபர் ஓட்டி பார்ப்பதற்கான அனுமதி கிடையாது, வேண்டுமென்றால் வீட்டின் முன்பாக உள்ள சாலையில் ஆன் செய்து மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்பாக வீட்டில் இருந்து சாலையில் இறக்கிய அடுத்த நொடியே அந்த நபர் பைக்கை ஸ்டார்ட் செய்து மாயமாகி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பைக்கை திருடி சென்ற அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்த சிசிடிவி காட்சிகளுடன் தொழிலதிபர் சுல்பி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply