ஐ.டி. கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்த ரஜினி!! – நெகிழ வைக்கும் சம்பவம்..

ஐ.டி. கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்த ரஜினி!! – நெகிழ வைக்கும் சம்பவம்..

ரஜினிகாந்த்தின் 73-வது பிறந்த நாளின் போது ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன் குவிந்திருக்க ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் பேரன்களோடு தங்கி விட்டார். மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் தனுசின் மகன்கள் லிங்கா, யாத்ரா ஆகியோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி செய்த ஒரு சம்பவம் நெகிழ வைத்திருக்கிறது. அதாவது, ரஜினி சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நிலையான வருமானம் இல்லாததால் சில நாட்களில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.

அப்போது சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலிருந்த உட்லண்ட்ஸ் ஓட்டலில் இரவு நேரத்தில் கிடைக்கும் காசை வைத்துச் சாப்பிட வந்து போயிருக்கிறார். அங்கே சர்வராக இருந்த நாராயண ராவ் என்பவர் ரஜினியின் நிலையை அறிந்து அவருக்குக் கொடுக்கும் பணத்திற்கு மேல் அதிகமாகவே சாப்பாடு கொடுத்திருக்கிறார்.

சில நேரங்களில் கையில் பணமில்லாத போது, பணம் வாங்காமலேயே சாப்பாடு கொடுத்திருக்கிறார். இது பற்றி ஓட்டலில் கேட்டபோது பணம் கொடுக்காவிட்டால் தனது சம்பளத்தில் எடுத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இப்படியே பல நாட்கள் ரஜினிக்குச் சாப்பாடு போட்டு வந்திருக்கிறார் நாராயணராவ்.

பின்னர் ரஜினி திரையுலகில் முன்னணி நடிகரானார். சில வருடங்களுக்கு முன்பு தனக்கு உதவியாக இருந்த நாராயணராவை தேடியிருக்கிறார். அவர் பல வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு விலகி விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர் உடுப்பியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ரஜினிக்குத் தெரிந்திருக்கிறது.

இதனால் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை ஏற்பாடு செய்து உடுப்பி நாராயண ராவைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து வயதாகி, வறுமையான நிலையில் உடுப்பியில் நாராயணராவ் வாழ்ந்து வருகிறார் என்று தெரிய வந்தது. இந்தத் தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ரஜினி சஸ்பென்சாக நாராயணராவ் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வயதான நிலையில் இருந்தாலும் ரஜினியைக் கண்டுகொண்டு உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார் நாராயண ராவ்.

அவரது குடும்ப நிலையை விசாரித்துத் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் அவர் பெயரில் பெரிய தொகை ஒன்றை வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை குடும்பத்திற்குச் செலவு செய்யக் கிடைக்கும்படி செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரது மகனுக்குத் தனக்கு தெரிந்த ஐ.டி. கம்பெனியில் வேலையும் வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply