மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்!!

மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்!!

கோவை,

கோவை மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பேட்டரியால் இயங்கும் சக்கரநாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஊன்றுகோல், கண்கண்ணாடி, மடக்குகுச்சி, நவீன செயற்கைகால்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

கோவை மாவட்டத்தில் சுமார் 53,201 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 22,715 மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளனர். வருவாய்த்துறையின் மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓய்வூதியம் ரூ.1000லிருந்து, ரூ.1500ஆக உயர்த்தி ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சூலூர் பகுதி-3 திட்டப்பகுதி, பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவர ஏதுவாக தரைத்தளத்தில் 27 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தில் சமவாய்ப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இதன்மூலம் இதுவரை 520 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தேவையான நலத்திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பாடிய நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது. சைகைமொழியில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைவாக உள்ள 12 மாணவர்களுக்கு ரூ.1,62,588 மதிப்பிலான ஸ்மார்ட்போன்களையும், 5 பேருக்கு ரூ.4,79,700 மதிப்பிலான நவீன செயற்கைக்கால்களையும், 4 பேருக்கு ரூ.4,24,000 பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு ரூ.20,800 மதிப்பிலா சி.பிசேர்களையும், 2 பேருக்கு ரூ.1,200 மதிப்பிலான ஊன்றுகோல்களும், 11 மாணவர்களுக்கு தலா ரூ.4000 வீதம் கல்விஉதவித்தொகை என மொத்தம் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோ.வசந்தராம்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலஅலுவலர் ரகு மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply