பகலில் அரசு பள்ளி ஆசிரியர் … இரவில் திருடன்… இதுவரை 18 கோயில்களில் கொள்ளையடித்த கில்லாடி நபரை தூக்கிய போலீஸ் …

ஹவேரி;
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம், லிங்கதேவராகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் தம்பக்காடு. பயாக்டி தாலுகாவில் உள்ள கலாபுஜி அரசு தொடக்கப் பள்ளியில் வசந்தகுமார் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வசந்த குமார் தனது நண்பரும், சுமைதூக்கும் தொழிலாளியான சலிம்(28) என்பவருடன் சேர்ந்து இரவு நேரத்தில் பல கோயில்களில் கொள்ளையடித்துள்ளார்.
ஹவேரி, ஷிவமோகா, உத்தரகன்னடா மாவட்டங்களில் உள்ள 18 கோயில்களில் வசந்தகுமார், சலீம் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்.
உத்தரகன்னடா மாவட்ட போலீஸ் எஸ்பி விஷ்ணுவர்த்தன் கூறுகையில் “ஹவேரி, ஷிவமோகா, உத்தரகன்னடா மாவட்டங்களில் உள்ள கோயில்களில் அடுத்தடுத்து தொடர்ந்து கொள்ளைபோனது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, தனிப்பிரிவு அமைத்து விசாரணையைத் தொடங்கினோம்.
குறிப்பாக ஸ்ரீசி ரூரல், பனாவசி, எல்லப்பூர், அங்கோலா, ரிப்பன்பேட் ஹெசநகர் ஆகிய நகரங்களில் உள்ள கோயில்களிலும், ஹம்சப்பாவி, ஹிரோகர்கூர், ஹாவேரி தாலுகா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளை போயிருந்தது.
இந்த கொள்ளை போன கோயில்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தது. இதையடுத்து, போலீஸார் நோட்டமிட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தி, வசந்தகுமார் அவரின் நண்பர் சலீம் இருவரையும் கைது செய்தனர்.
இதில் வசந்தகுமாரிடம் இருந்து, ரூ.19.20 லட்சம் மதிப்புள்ள நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், கோயில் பூஜைகளுக்கு பயன்படும் பாத்திரங்கள், ரூ.12 மதிப்புள்ள வாகனம், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், 9 கிராம் தங்கம், ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் சேர்ந்து 18 கோயில்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதில் சமீபத்தில் வசந்தகுமார் சமீபத்தில்தான் தனது சொந்த தாலுகாவான பயாக்டி தாலுகாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பெண் ஆசிரியை ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்று வசந்தகுமார் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.
வசந்தகுமார், சலீம் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்