குலதெய்வத்தை 14 வாரமும் வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்!!

குலதெய்வத்தை 14 வாரமும் வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்!!

ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபட்டாலும், குலதெய்வத்தின் நாமத்தை ஒரு முறையாவது உச்சரித்து, தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

குலதெய்வத்தை வியாழக்கிழமை அன்று, இந்த முறைப்படி விரதமிருந்து வழிபடும் போது, நீங்கள் என்ன நினைத்து விரதத்தை தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதலானது 14வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை காலையிலேயே வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிடுங்கள். அதன் பின்பு குளித்து முடித்துவிட்டு, இறைவனுக்கு பூக்களை அணிவித்து, ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து, உங்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும். சில பேருக்கெல்லாம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று கூட, வேண்டுதலை வைக்கலாம். 14 வாரமும் அந்த வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். வேண்டுதலை மாற்றக்கூடாது.

காலையில் உங்களது விரதத்தை தொடங்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், அந்த நாள் முழுவதும் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும், குறிப்பாக நாட்டு பசும்பாலால் செய்யப்பட்ட தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது கோடி புண்ணியத்தை உங்கள் குலத்திற்கே தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் உத்தமம். பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், இந்த வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது நீங்கள் வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில். மாலை நேரம் வழக்கம் போல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளிக்கிண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. கண்ணாடிக் கிண்ணமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

அந்த சிறிய கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்லி, மனமுருகி, மாலையும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மாலை தீபம் ஏற்றிவைத்து உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அதனால் இரவு நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஒரு வேலை தயிர் சாதம் சாப்பிடுவதோடு மட்டும் விரதம் இருக்கலாம்.

14வது வாரம் உங்களது விரதம் முடியும்போது, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில்களில் கொண்டுபோய் செலுத்திவிடலாம். குலதெய்வக் கோயில் தூரமாக உள்ளவர்கள், ஒரு மஞ்சள் துணியை எடுத்து, அந்த நாணயங்களை, முடிந்து வைத்து விடுங்கள். எப்போது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது அந்த நாணயங்களை குலதெய்வ கோயிலில் சேர்த்து விடுங்கள்.

வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று, மேல் சொல்லப்பட்ட முறைப்படி சுலபமான முறையில் குலதெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் போதும். 14வது வாரம் வியாழக்கிழமை அன்று, உங்களது இந்த விரதம் முடியும் போது, உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்து குல தெய்வத்தை வேண்டி தான் பாருங்களேன்! ரொம்ப நாளா உங்க வீட்ல இருக்கிற பிரச்சினை கூட விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இந்த விரதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு தான், உங்களால் உணர முடியும். ஆனால், நீங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கான முயற்சியை, நீங்கள்தான், இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்துடாதீங்க! உங்களை கைதூக்கி விடும் ஒரு ஊன்றுகோல் தான் உங்கள் குலதெய்வம்.

Leave a Reply