எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணம் யார் தெரியுமா ?…  பொதுக்கூட்டத்தில் பெயரை சொன்ன அமைச்சர் உதயநிதி…

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணம் யார் தெரியுமா ?…  பொதுக்கூட்டத்தில் பெயரை சொன்ன  அமைச்சர் உதயநிதி…

திருவள்ளூர் :

 எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணம் யார் என ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.

பால் வளத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பல நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் என்னிடம் தேதி வாங்குவார்கள். ஆனால் ஆவடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நானாகவே தேதி கொடுத்தேன்.

கடந்த மாதம் நான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்தானதால், நானே கேட்டு இங்கு வந்திருக்கிறேன். எனக்கு எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். ஆனால் எப்போதும் நான் உங்களின் வீட்டின் செல்லப் பிள்ளை தான். அமைச்சர் என்பதால் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன்.” என்றார்.

மேலும் பேசிய உதயநிதி, “நான் ஆவடிக்கு பல முறை வந்திருக்கிறேன். 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பேசிய முதல் இடம் ஆவடி. இதே இடத்தில் தான் அன்றும் பேசினேன்.

இப்போது, அமைச்சராகப் பொறுப்பேற்று கட்சியின் முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். எனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க அமைச்சர் நாசர் அண்ணன் தான் காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மாதத்திற்கு ஒரு முறையாவது எனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என பேசிவிடுவார்.

எனது செயல்பாடுகள் மூலம் இந்தப் பொறுப்புக்கு உண்மையாக இருப்பேன். ஆவடிக்கு பெரிய விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். உறுதி கொடுக்கிறேன் நாசர், கிருஷ்ணசாமி உதவியுடன் நிச்சயம் கொண்டு வருவேன் என உறுதி அளிக்கிறேன்..” என  பேசினார்.


Leave a Reply