கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது… 16 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்… கோவையில் அதிகரிக்கும் கஞ்சா கலாசாரம் …

கோவை;
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இடிகரை அடுத்துள்ள அத்திப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற இளைஞரிடம் விசாரிக்க முயன்றனர்.
போலீசாரை கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனை அடுத்து, போலீசார் அவரை மடக்கிப்பிடித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர்.
அப்போது, பையில் கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் சாகு(31) என்பதும், அவர் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 16.5 கிலோ அளவிலான 70 கஞ்சா சாக்லேட்டுகள், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராஜேந்திரகுமார் சாகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.