நள்ளிரவில் சென்னையில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து வந்து திடீர் ஆய்வு நடத்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி….

சென்னை;
சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 8 காவல் நிலைய காவலர்கள் மற்றும் இரவு ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் வகையில், வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவு சுமார் 1½ மணி நேரம் தனது சைக்கிளில் சாதாரண உடையில் பயணித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் 9 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளைச் சைக்கிளில் பயணம் செய்த இணை ஆணையர் ரம்யா பாரதி, இரவு ரோந்து வாகன காவலர்களிடம் கலந்துரையாடி பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், பீட் குறிப்பேடுகளை ஆய்வு செய்த அவர், கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்தும் காவலர்களிடம் கேட்டறிந்தார்.
காவல் துறையினரை விழிப்புடன் பணியாற்றச் செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் எனவும் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்து பணி செய்த சென்னை வடக்கு மண்டல இணை ஆணையரின் செயல் பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.