IND / BANG .. முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

வங்கதேசம் ;
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்தது. இதே போன்று வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 254 ரன்கள் முன்னிலையில், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (110), புஜாரா (102) ஆகியோர் சதம் அடிக்க, இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதிக ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வங்கதேச அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த அணியின் தொடக்க வீரர் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த யாசிர் அலி 5 ரன்களில் வெளியேறினார். ஜாகிர் ஹசன் நிலைத்து நின்று 100 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 4 நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 5ஆது நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். எனினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஷகிப் அல் ஹசன் 108 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 84 சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக வங்கதேச அணி 324 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் அக்ஷர் படேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சிராஜ், அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி தாகாவில் தொடங்குகிறது.