மணல் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்… காப்பு மாட்டிய போலீஸ்…

விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மீனம்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் முன்வர் பாஷா. இந்தநிலையில் முனவர் பாஷாவும் அவரது மகன் லியாகத் அலியும் சேர்ந்து மீனம்பூர் ஏரியில் இருந்து அனுமதி பெறாமல் மணல் கடத்தி வருவதாகவும், ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவருக்கும் மீனம்பூர் கிராமத்தை சேர்ந்த ஷாலிக் உசேன், அப்துல் சமத் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மணல் கடத்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டியதையடுத்து அந்த பகுதிக்கு பத்திரிக்கை நிருபர்கள் சேய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களை வீடியோ பதிவு செய்ய விடாமல் மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நீயாகத் அலி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மணல் கடத்துவதாக புகார் அளித்த ஷாலிக் உசேன் அவரது நண்பர்களுடன் மீனம்பூர் ஏரி பகுதிக்கு காரில் வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் பாஷாவின் மகன் நீயாகத் அலியும் அவர்களது கூட்டாளிகளும் ஷாலிக் உசேன் மற்றும் அப்துல் சமத் ஆகியோரை காரில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்து உதைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் சமூகவலை தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஷாலிக் உசேன், அப்துல் சமது உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் புகார் அளித்த நிலையில், ஷாலிக் உசேன் மற்றும் அப்துல் சமத் ஆகியோரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நியாக்கத் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.