சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு வசதி முறை ரத்து !!

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு வசதி முறை ரத்து !!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

கூட்ட நெரிசலால் சிறு குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேரள ஐகோர்ட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியது.

பின்னர் கூட்ட நெரிசலை தவிர்க்க தினசரி தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறைஎன்னாச்சு? என கேள்வி எழுந்தது.

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், “சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேற்றைய தினம் ஏற்கனவே (கட்டுப்பாடுக்கு முந்தைய) 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள்.

இதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply