மணப்பெண்களுக்கு பிரமிப்பூட்டும் ‘பிளவுஸ் டிசைன்கள்’!!

மணப்பெண்களுக்கு பிரமிப்பூட்டும் ‘பிளவுஸ் டிசைன்கள்’!!

மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் ஜாக்கெட் (பிளவுஸ்)களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள். விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.

இப்படி டிரெண்டான விஷயங்களை, யூ-டியூப் வீடியோவாக மாற்றி, தனக்கென லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார், சத்யா பாலசுப்பிரமணியன். சென்னையைச் சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி பட்டதாரி. தையல் கலை, இவரது குடும்பத் தொழில் என்பதால், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் நுழையும் நவீனங்களை, யூ-டியூப் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு விளக்குகிறார். இவரது சமூக வலைத்தளங்களில், தையல் கலை சம்பந்தமான எல்லா நுணுக்கங்களும், அதன் செய்முறைகளும் விளக்கமாக கொடுக்கப்பட்டிருப்பதால், தையல் கலை பயில ஆர்வமாக இருப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

தையல் கலையின் புதுமைகளை, பிளவுஸ் வேலைபாட்டின் நுணுக்கங்களை… யூ-டியூப்பில் விளக்கி வரும் சத்யாவிடம், பிளவுஸ் பற்றிய பல கேள்விகளை எழுப்பினோம். அவர், பதிலளித்தவை இதோ….

 • பிளவுஸ் அன்றும் இன்றும் எப்படி மேம்பட்டிருக்கிறது?

முன்பு குறிப்பிட்ட சில வகை கழுத்து வகைகள் (நெக்) மட்டுமே பிரபலமாக இருந்தன. பலர், தங்களுக்கு பொருத்தமான நெக் வகைகளை மட்டுமே, எல்லா கொண்டாட்டங்களிலும் தைத்து அணிந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதிது புதிதான நெக் வகைகளையும், பெண்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவதால், நிறைய நெக் வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. கூடவே சிலீவ் வகைகள் ஏராளமாக வந்துகொண்டே இருக்கின்றன.

 • சமீப காலமாக புடவைக்கு செலவழிப்பது போல, பிளவுஸ் விஷயத்திலும் பாரபட்சமில்லாமல் செலவழிக்கிறார்கள். சிறப்பான வேலைப்பாடுகளுடன் பிளவுஸ் அணிகிறார்கள். அது ஏன்?

பெண்கள் பொதுவாக தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி, சிறப்பாக காட்சிப்படுத்திக் கொள்வதற்காகவே, பிளவுஸ் வகைகளை புதுப்புது வேலைபாடுகளில் அலங்கரிக்கிறார்கள். சிலர் சேலைக்கு நிகரான செலவில், பிளவுஸையும் அலங்கரித்து அணிகிறார்கள்.

 • பிளவுஸை, எப்படியெல்லாம் அழகாக்கலாம்?

புதுமையான கழுத்து வகைகளை வைத்து, தையல் கலையிலேயே பிளவுஸ் வகைகளை பிரமாண்டமாக தைக்கலாம். இதுபோக, ஆரி வேலைபாடுகள், பிளவுஸை நேர்த்தியாக்கும். திருமணங்கள், விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பெண்கள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் வகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஆரி வேலைப்பாடுகளில், மெஷின் வேலைப்பாடு மற்றும் கைகளில் செய்யப்படும் வேலைப்பாடு என மதிப்பும், அதன் தரமும் வேறுபடும். இவை கூடவே, பெயிண்டிங் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் இப்போது பிளவுஸ்களை அலங்கரிக்கின்றன.

 • பிளவுஸ் மோகம் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே வேறுபடுகிறதா?

நிச்சயமாகவே வேறுபடுகிறது. நகரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரின்சஸ்கட் பிளவுஸ் மற்றும் சிலீவ்லெஸ், பேன்சி பிளவுஸ் வகைகள் கிராமப்புற பெண்களிடையே அதிக வரவேற்பு பெறுவதில்லை. அதேசமயம் நகர பெண்கள், எல்லா வகையான பிளவுஸ் டிசைன்களையும் அணிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

 • என்னென்ன பிளவுஸ் வகைகள் இருக்கின்றன?

பிளவுஸ் என்பதற்குள் எண்ணிலடங்கா மாடல்கள் இருக்கின்றன. பொதுவாக அதை வகைப்படுத்தி சொல்லும்போது பிளைன் பிளவுஸ், லைனிங் பிளவுஸ், பிரின்சஸ் கட் பிளவுஸ், பிரின்சஸ் கட் வித் கப் பிளவுஸ், சிங்கிள் கட்டோரி பிளவுஸ், டபுள் கட்டோரி பிளவுஸ், டிசைனர் பிளவுஸ், பிரெய்டல் பிளவுஸ், பேன்சி பிளவுஸ், காலர் பிளவுஸ், போட் நெக் பிளவுஸ்… இப்படி நிறைய வகைகள் இருக்கின்றன.

 • விழாக்கள், அலுவலகம், கேஷ்வல் என நிகழ்வுகளுக்கு ஏற்ப அணியும் பிளவுஸ் வகைகள் மாறுபடுமா?

ஆம். மாறுபடும். வரவேற்பு மற்றும் பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு டிசைனர் பிளவுஸ் மற்றும் பேன்சி பிளவுஸ் சிறப்பாக இருக்கும். கல்யாணம், திருவிழா மற்றும் தெய்வீக விழாக்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிளவுஸ் அணிவது உகந்ததாக இருக்கும். இதற்கு கிளாசிக் பிளவுஸ் சிறந்தது. அலுவலகங்களுக்கு காட்டன் சேலையுடன் கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் சரியாக இருக்கும்.

 • காட்டன் சேலைகளுக்கு அணியக்கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் பற்றி கூறுங்கள்?

போட் நெக், சைனீஸ் காலர் நெக், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், ப்ளோர் டைப் ஸ்லீவ் பிளவுஸ், ஷர்ட் டைப், வெல்வெட் பிளவுஸ், பின்புற நெக் டிசைன்… இப்படி காட்டன் வகைகளில் நிறைய பிளவுஸ் வகைகள் இருக்கின்றன.

 • பிளவுஸ் வகைகளில் சமீபத்திய புது வரவு எது?

போட் நெக் பிரின்சஸ் கட் பிளவுஸ் மற்றும் ஆரி ஒர்க் பிளவுஸ்தான் சமீபத்திய டிரெண்ட் பிளவுஸ்கள்.

 • டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் டிரெண்டான பிளவுஸ் வகை எது? ஏன்?

போட் நெக் வகையில் தயாரான பிரின்சஸ் கட் பிளவுஸ் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். அதேபோல, சிலீவ்லெஸ் பிளவுஸ் வகைகளும், இளம் பெண்களின் பிடித்தமான பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டும், பார்ப்பதற்கு எப்போதும் டிரெண்டாகவே இருக்கும். அதேபோல இளமையான தோற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், டீன் ஏஜ் பெண்கள் இவற்றை விரும்புகிறார்கள்.

 • பிளவுஸ் தையல் கலை எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது?

உடை நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பிளவுஸ் தையல் கலையும், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. நவீனமாக அறிமுகமாகும், சேலை வகை களுக்கு ஏற்ப, பிளவுஸ் வகைகளையும் நவீனமாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால், புதுமையான கலை வடிவங்களை பிளவுஸ் வேலைபாடுகளில் புகுத்தி வருகிறோம்.

 • பெரும்பாலான குடும்ப தலைவிகள் பிளவுஸ் தையல் கலை பயில ஆர்வம் காட்டுவது ஏன்?

டெய்லரிங் கலை அனைவராலும் எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய கலை என்பதாலும், இதற்கு பெரிய உபகரணங்களோ, பெரிய முதலீடோ தேவைப்படாது என்பதாலும், இந்தக் கலையை கற்க, குடும்ப தலைவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இதை கற்றுக்கொள்வதால், தங்களுடைய பிளவுஸ் தேவையையும் பூர்த்தி செய்துகொண்டு, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப கணிசமான வருவாயையும் ஈட்டமுடியும்.

Leave a Reply