“ஜேகே டயர்” நோவிஸ் கோப்பை பிரிவில் “சாம்பியன் பட்டம்” வென்ற வினித்…

கோவை,
25வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாள் போட்டியில் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை பிரிவில் வினித் சாம்பியன் பட்டம் வென்றார். 2 பந்தயங்களில் முதலிடம் பிடித்தபோதும் புள்ளிகள் வித்தியாசத்தில் 2வது இடம் பிடித்தார் கைல் குமரன்.
25வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் முதல் நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, எல்ஜிபி பார்முலா 4, ஜேகே டயர் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் நோவிஸ் கோப்பை பிரிவில் வினித் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து கைல் குமரன் 2வது இடம் பிடித்தார்.
முதல் இரண்டு பந்தயங்களில் கைல் குமரன் முதலிடத்தை பிடித்தபோதிலும், 60 புள்ளிகள் எடுத்ததால் வினித் குமார் முதலிடம் பிடித்தார். இருவருக்கும் இடையே 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கோவையில் நன்றாக வெயில் அடித்த காரணத்தால் பந்தயப் பாதை நல்ல தெளிவாக இருந்தது. இதன் காரணமாக வீரர்கள் மிக உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
நோவிஸ் கோப்பை போட்டியின் 3 பந்தயங்கள் முடிவடைந்த நிலையில் இன்று 4வது பந்தயம் நடைபெற உள்ளது. இது ஜேகே ரேசிங் சாம்பியன்ஷிப்பின் 25வது ஆண்டாகும். இதன் காரணமாக இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.நோவிஸ் கோப்பை பிரிவை பொறுத்தவரை முதல் 3 இடங்களை டார்க் டான் ரேசிங் வீரர்கள் பிடித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கைல், கார்டிங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார், மேலும் அவர் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியின் முதல் இரண்டு பந்தயங்களில் அவர் சிறப்பாக காரை ஓட்டி முதலிடம் பிடித்தார்.
இது குறித்து கைல் கூறுகையில்,
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் மனதளவில் நன்கு தயாராகி இருந்தேன். என்னால் முடிந்தவரை நான் நன்றாக செயல்பட்டேன் என்று தெரிவித்தார். நடைபெற உள்ள இறுதிப் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும். இது அனைத்து பிரிவுகளிலும் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும். முதல் இரண்டு பந்தயங்களில் கைலுக்கும் வினித் குமாருக்கும் ஜோயல் ஜோசப்பிற்கும் இடையேயான நேர வித்தியாசம் என்பது பெரிய அளவில் இல்லை.
நடைபெற்ற போட்டிகளில் டார்க் டான் ரேசிங் குழு சிறப்பாக செயல்பட்டது. 25வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டி குறித்து ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட்ஸ் தலைவர் சஞ்சய் சர்மா கூறுகையில், 25 ஆண்டுகளாக நாங்கள் போட்டிகளை நடத்தி உள்ளோம் என்பது மிகப்பெரிய சாதனையாகும். இந்த வெற்றியில் எங்களின் கடின உழைப்பும், பலரது அர்ப்பணிப்பும் உள்ளது.
எங்களின் இந்த போட்டிகள் நூற்றுக்கணக்கான இளம் மற்றும் வளரும் பந்தய வீரர்களை உலகிற்கு அடையாளம் காட்டி உள்ளது. உலகிற்கு முன்னோடியாக விளங்கும் சாம்பியன்களை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களின் வெள்ளி விழா போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும், எங்களின் முக்கிய பயணத்தில் ஆதரவு அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், போட்டியாளர்களுக்கும் எங்கள் நிறுவனம் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த போட்டிகளில் முதன்மையாக விளங்கும் எல்ஜிபி பார்முலா 4 பந்தயம் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த போட்டி இரண்டு சம்பவங்களின் காரணமாக சிவப்பு கொடி காட்டப்பட்டு பந்தயம் நிறைவு பெற்றது. ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டேராடூனைச் சேர்ந்த அனுஷ்ரியா குலாட்டி உடனடியாக தடுப்பு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் பந்தயத்தில் பங்கேற்றார்.
இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படும் என்ஜின் மாருதி ஸ்விப்ட் காருக்கான என்ஜின் ஆகும். எல்ஜிபி பார்முலா 4 போட்டிகளில் தற்போது பங்கேற்றுள்ள வீரர்கள் முதலில் நோவிஸ் கோப்பை போட்டியில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.