50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு பணம் வாங்கிக்கொண்டு 5 ரூபாய்க்கான டிக்கெட் அளிப்பு…வாங்கியது நீதிபதி என்று தெரியாமல் வாக்குவாதம் செய்த கோவில் ஊழியர்கள்.. தெரிந்ததும் ஷாக்..

50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு பணம் வாங்கிக்கொண்டு 5 ரூபாய்க்கான  டிக்கெட் அளிப்பு…வாங்கியது நீதிபதி என்று தெரியாமல் வாக்குவாதம் செய்த  கோவில் ஊழியர்கள்.. தெரிந்ததும் ஷாக்..

சென்னை;

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான எஸ்.எம். சுப்பிரமணியம், சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை சென்னை வடபழனி முருகன் கோயிலிலுக்கு சென்றுள்ளார். தான் யார் என்பதை வெளிப்படுத்தி கொள்ளாமல், விஐபி வரிசையில் செல்லாமல் கட்டண தரிசன வரிசையில் சென்றுள்ளார்.

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து கட்டண தரிசனத்துக்கான நுழைவு கட்டணமாக 150 ரூபாயை கொடுத்து, மூன்று டிக்கெட்டுகளை நீதிபதி வாங்கி உள்ளார். அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டுகளும், ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

தான் கொடுத்த தொகைக்கு 45 ரூபாய் குறைவாக டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 45 ரூபாய்க்கான உரிய ரசீதை வழங்கும்படியும் கவுன்ட்டரில் நுழைவு சீட்டு அளித்தவரிடம் கேட்டுள்ளார் நீதிபதி. அதற்கு அந்த அலுவலர் பதில் எதுவும் கூறாததால், அதிருப்தியடைந்த நீதிபதி, இதுதொடர்பாக செயல் அலுவலரிடம் பேச வேண்டும் என்றும், அவருடைய செல்ஃபோன் எண்ணை தரும்படியும் கேட்டுள்ளார்.

செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை தர மறுத்த கோயில் ஊழியர்கள், வந்திருப்பவர் நீதிபதி என்று தெரியாமலேயே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதியின் மனைவி, ‘முதல்வரே தமது தொடர்பு எண்ணை பொதுமக்களுக்கு பகிரும்போது செயல் அலுவலரின் தொடர்பை எண்ணை ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்க, முதல்வர் வேண்டுமானால் தரலாம்…. அதற்காக செயல் அலுவலர் அவரது தொடர்பு எண்ணை தர வேண்டிய அவசியமில்லை என்று ஆவேசமாக கூறி உள்ளனர் அலுவல்ர்கள்.

இப்படி இருதரப்பும் வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் கோயில் அலுவலர்கள் எல்லாம் சேர்ந்து நீதிபதியை குடும்பத்துடன் கோயிலை விட்டு வலுகட்டடாயமாக வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.

விஷயம் போலீசுக்கு தெரியவே, பதறி்ப்போய் கோயிலுக்கு காவல் துறை வந்த பிறகே வந்திருப்பவர் நீதிபதி என்பது கோயில் ஊழியர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் செய்வதறியாது திகைத்தும், வெடவெடத்து போயும் நின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோயிலின் செயல் அலுவலர் அரசு தரப்பு வழக்கறிஞருடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேரில் ஆஜரானார்.

100 கோடி ரூபாய்க்கு அதிமான சொத்தும் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வருமானமும் வரும் வடபழநி முருகன் கோயிலில் இதுபோன்று முறைகேடு நடைபெறுவது குறித்து வருத்தமும், கண்டனமும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில் இதைவிட அதிக வருமானம் வரும் கோயில்களின் நிலை என்ன என்பது குறித்து கவலை தெரிவித்தார்.

அறநிலைய துறை ஆணையரும், செயல் அலுவலர்களும் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாமானிய மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தகவல் பலகை வைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுகுறித்த அறிக்கையை ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த சம்பவம் குறித்து நீதிபதி வழக்கு எதுவும் பதியவில்லை என்பதும். அறநிலையத் துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக வழக்கு பதியவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

Leave a Reply