சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வரும் நிலையை கருத்தில் கொண்டு, அதிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்: சபரிமலை வந்த பக்தர்கள் வேண்டுகோள்!!

சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வரும் நிலையை கருத்தில் கொண்டு, அதிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்: சபரிமலை வந்த பக்தர்கள் வேண்டுகோள்!!

சபரிமலையில் மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.


நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவரும் நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்தே வருகிறது.

சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். சில நாட்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை அதிகரித்தாலும், காத்திருப்பு மட்டும் குறையவில்லை. இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.கடந்த 2 நாட்களாக செயல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை நல்ல பலனை கொடுத்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தனி வரிசை அமல்படுத்தப்பட்டதால், தரிசனம் எளிதானது. 2 மணி நேரத்துக்கும் குறைவாகவே காத்திருப்பு நிலை உள்ளது. கோர்ட்டு தலையிடுவதற்கு முன்பே இதனை முன்னரே செய்திருக்கலாம்.

ஆன்லைன் வரிசை முறை மூலம் தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வரும் நிலையை கருத்தில் கொண்டு, அதிலும் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். தற்போதைய பார்க்கிங் வசதிகள் போதுமானதாக இல்லை. 10 ஆயிரம் வாகனங்கள் வந்து சேரும் போது, போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் கால விரயமும் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு புதிய வாகன நிறுத்துமிடங்களை உடனே உருவாக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply