மறுபடியும் மொதல்ல இருந்தா ?…. புதியவகை கொரோனா பரவல் எதிரொலி …கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிய மத்திய அரசு அறிவுறுத்தல்…

டெல்லி;
புதிய வகை கொரோனா பரவிவரும் நிலையில், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கடிதத்தில், “புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வரவுள்ளதால் மக்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர்கள் பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்
புதியவகை கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது.
சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்துவருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.