ஆஞ்சநேயருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் !!

ஆஞ்சநேயருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் !!

நாமக்கல் கோட்டையில் உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லாலான ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இன்று விழாவுக்கு உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய கோட்டை ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பார்க் ரோட்டில் எம்.ஜி.ஆர் வளைவில் இருந்து மதுரைவீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவால் நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு, எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்து வருகிறது.

Leave a Reply