நானும் பேமஸ் ஆக வேண்டாமா ?.. அதான் இப்படி பண்ணினேன் .. இளைஞரின் செயலால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் …

சென்னை;
சென்னையில் 2 கார்களுக்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், தீ வைத்ததற்காக அந்த நபர் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரில் இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைத் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
திடீரென தீப்பிடித்து எரிந்த காரினைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்மநபர் ஒருவர் கார்களுக்கு அடுத்தடுத்து தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்நபரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், “டிக்டாக், யூடியூபர்கள் போன்று நானும் பிரபலமாக வேண்டி இப்படிச் செய்தேன்” எனக் கூறியுள்ளார். விக்னேஷ் என்ற அந்த நபர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.