சரியாக படிக்கவில்லை என்று கூறி 4 ஆம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் சூடு வைத்த கொடூர தலைமை ஆசிரியை….

மங்கலம்;
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி 4 ஆம் வகுப்பு பயிலும் கெடாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் மணிமேகலை தம்பதியினரின் மகள் கௌதமி பள்ளியில் சரியாக படிக்காமல் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த தலைமையாசிரியை உஷாராணி சரிவர படிக்கவில்லை என்பதற்காக தீக்குச்சியை பற்றவைத்து கௌதமி முகத்தில் இடது கன்னத்தில் சூடு வைத்துள்ளார். கன்னத்தில் சூடு காயம் அடைந்த கௌதமி பள்ளியை விட்டு வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற நிலையில் வீட்டிலிருந்த தாய் மணிமேகலை இடம் பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து விவரித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை உறவினர்களுடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை உஷாராணி இடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணிமேகலை உறவினர்களுடன் மங்கலம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவினை அளித்துள்ளார்.
இதன்அடிப்படையில் மங்களம் காவல் நிலைய போலீசார் இன்று மாலை விசாரணைக்காக தலைமை ஆசிரியை உஷாராணியை அழைத்துள்ளனர் அப்போது காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த தகவலை அறிந்த உஷாராணி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோன்று மங்களம் காவல் நிலைய போலீசார் தீக்குச்சியால் முகத்தில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி கௌதமிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.