விழாவுக்கு வராத 10 எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அமைச்சர் உதயநிதி…

கோவை;
கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி , செந்தில் பாலாஜி மற்றும் எம்பி.-க்கள் பி.ஆர்.நடராஜன் , சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் 799 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 936 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் 229 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் 368 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர்,
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்காத கோவையை சேர்ந்த அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏ-க்கள் 10 பேருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
அத்துடன், அவர்களின் காதுகளுக்கு இந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும் என தெரிவித்த அவர், சென்னைக்கு அடுத்த இடம் கோவை என பேசப்பட்டதை குறிப்பிட்டார். கலைஞரின் பேரன், முதலமைச்சரின் மகன் என்பதை விட, தமிழ்நாட்டு மக்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதே பெருமை என்று, அமைச்சர் உதயநிதி கூறினார்.
முன்னதாக, கோவை நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது, 6 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை புல்வெளி ஓடுதளம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் மைதானத்தை புதுப்பிக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.