திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்று தீர்ந்தன.

இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கான இலவச டைம் ஸ்லாட் டிக்கெட் வரும் 1-ந் தேதி முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகை யில்:-

வைகுண்ட வாசல் தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ந் தேதி இலவச டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணதேஜா ஓய்வு இல்லத்தில் தரிசன நேரத்திற்கு வரவேண்டும்.

குறைந்த அளவு அறைகள் மட்டுமே உள்ளதால் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.

தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க இலவச டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும்.

திருப்பதியில் நேற்று 62,152 பேர் தரிசனம் செய்தனர். 30,682 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Reply