மூளையை உண்ணும் அமீபா நோய்; தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!

மூளையை உண்ணும் அமீபா நோய்; தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!

ஏரி, குளங்களில் நீச்சல் அடிக்கும் பொழுது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். பின்பு மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும். இது மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படுகிறது.

முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (PAM) என்று அழைக்கப்படும், இந்த தொற்று Naegleria fowleri எனப்படும் சூடான நன்னீரில் காணப்படும் நுண்ணிய ஒற்றை செல் அமீபாவால் ஏற்படுகிறது. 1937ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்காவில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது.

மூளையை உண்ணும் அமீபா நோய்:

இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ம் தேதி சொந்த ஊர் திரும்பிய 50 வயது நபரே மறுநாளே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, தலைவலி, காய்ச்சல், வாந்தி, பேச்சு மந்தம் மற்றும் கழுத்து விறைப்பு போன்ற மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், கடந்த 21ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தென்கொரியாவில் முதல்முறையாக பாதிப்பு:

இதுதொடர்பாக, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து சென்று நாடு திரும்பிய அந்த 50 வயது நபர் மூளையை உண்ணும் அமீபா எனும் அரியவகை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.

Naegleria fowleri என்பது உலகெங்கிலும் உள்ள சூடான நன்னீர் ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அமீபா ஆகும்.

இந்த தொற்றானது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என கொரிய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


உயிர்போக 97% வாய்ப்பு:

அமெரிக்கா, இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கடந்த 2018ம் ஆண்டு வரையில் மூளையை உண்ணும் அமீபா எனும் அரிய வகை நோயால் 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்த நோயால் இதுவரை 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

மூளையை உண்ணும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் பலியாகி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்க்கான, எதிராக பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply