மருந்து நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டிலிருந்து ஒருவர் கமிசன் கேட்டு மிரட்டல்… வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு…

கோவை:
சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66ஆவது வார்டு ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.90 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், ”
தமிழகத்தில் மருந்து விநியோகம் செய்வதில் மிகப்பெரிய பிரச்னை உள்ளது. மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை.
மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தார்களை முதலமைச்சரின் இல்லத்தில் இருக்கும் ஒருவர் அழைத்து தங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை விநியோகம் செய்ய முடியும்’ என பேசுவதாக விமர்சித்தார்.
மேலும் மருத்துவர்களுக்கு தாங்கள் கூறும் மருந்துகளைத் தான் எழுதித் தர வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடும் அரசாக இந்த அரசு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய வேண்டிய அரசு அந்தத் திட்டத்தையே இல்லாமல் ஆக்குவதாகவும், ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெறுவதாகவும் அப்படி என்றால் ஒவ்வொரு துறையிலும் வழங்க வேண்டிய உதவிகளுக்கு பதில் பணமாக கொடுத்து விடுவீர்களா என கேள்வி எழுப்பினார், வானதி சீனிவாசன்.
மேலும் முதலமைச்சர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்ற குடும்ப ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுவாக வீடுகளில் தான் பாகம் பிரிப்பார்கள் எனத் தெரிவித்த அவர் இங்கு மாநிலத்தின் முதலமைச்சரின் குடும்பத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் துறைகளை பிரித்து வருவதாக கூறினார்.