ராணுவ வீரர்களின் பேரில் பணம் மோசடி… எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…

ராணுவ வீரர்களின் பேரில் பணம் மோசடி… எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…

புதுச்சேரி ;

ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையதள மோசடிகள் பெருகிவரும் நிலையில் மோசடி நபர்கள் தற்போது ராணுவ வீரர்களின் பெயர்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தற்போது மோசடி நபர்கள் இணையதளத்தில் பொருட்களை விற்பதுபோல் அறிவிப்பு வெளியிட்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் ராணுவ வீரர்கள்போல் உடையணிந்து அவர்கள் மோசடியில் ஈடு படுவதால் பொதுமக்கள் பலரும் அதை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர்.

ராணுவசீருடையுடன் கூடிய அடையாள அட்டையுடன் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் தளங்களில் பதிவிடுகின்றனர். தான் வேறு மாநிலத்துக்கு மாறுதல் ஆகி செல்வதால் அந்த வாகனத்தை அவ்வளவு தூரம் எடுத்து செல்ல முடியாததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை ரு.85 ஆயிரத்துக்கு விற்பதாக பதிவிடுகின்றனர்.

அதை நம்பி அவர்களை தொடர்புகொண்டு பேசினால், ரூ.10 ஆயிரம் முன்பணமாக அனுப்புங்கள், உடனடியாக பார்சல் செய்து அனுப்புவதாக கூறுவார்கள்.

மேலும் ராணுவ சீருடையுடன் வீடியோ காலில் வந்து பேசுவார்கள். அதை நம்பி ரூ.10 ஆயிரம் போட்டால் வாகனத்தை தயார் செய்வது போல் புகைப்படத்தை அனுப்பி மேலும் ஏதாவது பொய் சொல்லி ரூ.10 ஆயிரத்தை அனுப்ப சொல்வார்கள்.

அந்த பணம் கிடைத்தவுடன் அவருடைய அனைத்து அழைப்புகளும் துண்டிக்கப்படும். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply