ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய நபர்…. காப்பு மாட்டிய போலீஸ் ..

கரூர் ;
கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என்று கூறி ரிஜிஸ்டர் ஆபீசில் பணம் கேட்ட நபரை கரூர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், மேலக்கரூர் அமைந்துள்ளது ரிஜிஸ்டர் ஆபீஸ். இந்த அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
அலுவலக வேலை நேரத்தில் உள்ளே நுழைந்த கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சங்குகுமார் (41) என்ற நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும், அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி அந்த நபர் சார்பதிவாளரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் கண்ணன் அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். சங்கு குமார் காண்பித்த அடையாள அட்டை போலியானது என்ற சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில், சார் பதிவாளர் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் சார் பதிவாளர் அலுவலகம் வந்த கரூர் காவல் நிலைய போலீசார், விசாரணை செய்ததில் அந்த நபர் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சார்பதிவாளர் கொடுத்த புகாரினை பெற்றுக் கொண்ட கரூர் போலீசார், அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.