உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்… கலெக்டர் அதிரடி நடவடிக்கை …..

விழுப்புரம்:
பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கும் பொருட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள 688 ஊராட்சிகளில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தொடர்ச்சியாக 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 3,689 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 7,562 சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக் கிணங்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டன.
அப்படி சுத்தகரிப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளை மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை அகரம் ஊராட்சியில் அதிகாலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெறாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
உடனே பணியினை மேற்கொள்ளாத ஊராட்சி செயலாளர் விநாயகம் என்பவரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்தார். அதோடு ஊராட்சி மன்ற தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.