வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டனர்!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும், நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, ஆண்டாள் கிளிமாலை உள்ளிட்ட திருஆபரணங்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். ராஜமகேந்திரன் சுற்றை வலம் வந்து, நாழிக்கேட்டான் வாசல் வழியாக தங்கக்கொடி மரத்தை நம்பெருமாள் சுற்றினார். தொடர்ந்து துரைப்பிரகாரம் வழியாக சென்ற நம்பெருமாள், விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டருளினார்.
இதைத் தொடர்ந்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த முறை அனுமதி அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டனர்.