குழந்தை பிறந்த அன்னைக்கும் ஷூட்டிங்கா? ஒரு சிறப்புத் தோற்றத்து க்காக, ரஜினிகாந்த் அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு!!

1982 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நன்றி மீண்டும் வருக”. இத்திரைப்படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான மௌலி இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் சினிமாவில் நடிகராக இருக்கும் பிரதாப் போத்தன், தனக்கு திருமணம் ஆனால் சினிமா மார்க்கெட் போய்விடுமோ என்ற குழப்பத்தில் இருக்கிறார். ஆதலால் பிரதாப் போத்தனுக்கு திருமணம் ஆன ஒரு முன்னணி நடிகர் அறிவுரை கூறுவது போல ஒரு காட்சியை எடுக்கவேண்டும் என்று இயக்குனர் மௌலி திரைக்கதை எழுதியிருந்தார்.
அதில் பிரதாப் போத்தனுக்கு அறிவுரை கூறுவது போன்ற முன்னணி நடிகராக யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது, கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என மௌலிக்கு தோன்றியதாம். உடனே கமல்ஹாசனை அணுகினார் மௌலி. ஆனால் கமல்ஹாசன் அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை அணுகினார் மௌலி. உடனே ரஜினிகாந்த்தும் ஒப்புக்கொண்டுள்ளார். ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிக்காக தனியாக செட் போட வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ரஜினிகாந்த்தோ “செட் எல்லாம் போடவேண்டாம். நான் இப்போது ஃப்ரியாகத்தான் இருக்கிறேன். எனது வீட்டிலேயே எடுங்கள். என்னிடம் அறிவுரை கேட்க வரும் நடிகர் என் வீட்டிற்கு வந்து கேட்பது போல் காட்சி இருந்தால்தானே பொருத்தமாக இருக்கும்” என கூறினாராம்.
உடனே ஒரு கேமரா மேன், மற்றும் சில உதவியாளர்கள் அடங்கிய ஒரு சிறு குழுவை அழைத்துக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டிற்கு புறப்பட்டார் மௌலி. அங்கே ரஜினிகாந்த் வீட்டில் மிகவும் வித்தியாசமான கண்ணாடி அறை ஒன்றில் அந்த காட்சியை படமாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன் படி அந்த காட்சியில் சிறப்பாக நடித்தார் ரஜினிகாந்த்.
இந்த காட்சியை எடுத்த அன்றைக்கு முந்தைய நாள்தான் ரஜினிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மேல் மாடியில் லதா ரஜினிகாந்த் குழந்தையுடன் இருந்திருக்கிறார். இந்த விஷயம் படக்குழுவினரில் உள்ள யாருக்கும் அப்போது தெரியாதாம். இந்த காட்சியை எடுத்து முடித்தப்பிறகுதான் ரஜினிகாந்த்துக்கு குழந்தை பிறந்த விஷயமே மௌலிக்கு தெரியவந்ததாம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் மௌலி ஆச்சரியத்தில் மூழ்கினாராம். நேற்றுதான் குழந்தை பிறந்திருக்கிறது, இந்த சமயத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்துக்காக, அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்த அனுமதித்திருக்கிறாரே என்ற பெருந்தன்மையை பார்த்து மௌலி வியந்துப்போனாராம். மேலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்கவில்லையாம் ரஜினிகாந்த்.