நெல் கொள்முதலில் மோசடி செய்து ரூ.8 கோடி ஆட்டையை போட்ட VAO கைது…

நெல் கொள்முதலில் மோசடி செய்து  ரூ.8 கோடி ஆட்டையை போட்ட VAO  கைது…

ராணிப்பேட்டை ;

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நிலம் இல்லாதவர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 8 கோடி வரை மோசடி செய்த வழக்கில் இதுவரை அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 32  பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் நெல்லை வாங்கி அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் வேளாண் அதிகாரிகளின் துணையுடன் அதிக விலைக்கு வழங்கி கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்த நெல் கொள்முதல் மோசடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி டிஎஸ்பி கவுதமன் தலைமையில் வேலூர், திருவண்ணாமலை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகாரிகள் துணையோடு நிலம் இல்லாதவர்கள் பெயர்களிலும் போலி ஆவணங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது உறுதியானது. நெல் விற்பனையில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத்தொகை வழங்காதது என ரூ.8 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல்(43), நெமிலி தாலுகா சிறுகரும்பூரை சேர்ந்த குமரவேல்பாண்டியன்(49) ஆகிய 2 பேரை டிஎஸ்பி கவுதமன் தலைமையில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்  இந்த வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (38) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

நெல் கொள்முதல் மோசடியில் தற்போது கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போலியான நபர்களின் பெயரில் போலி சிட்டா அடங்கல் வழங்கி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து லட்சக்கணக்கில் ஆதாயம் பெற்றுள்ளது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பாலசுப்ரமணியத்தை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 35 பேரை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply