திமுக அரசை தாங்கி பிடிப்பதே ஊடகங்கள் தான்… அந்த ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி அவ்வளவுதான் ..வேலுமணி கருத்து ..

கோவை;
கோவையில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விலை வாசி உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கண்டன உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
திமுக ஆட்சி வந்ததும் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை என பலவற்றில் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை சரிவர பராமரிப்பது இல்லை.
மேலும் நேற்றைய தினம் திமுக கூட்டத்தில் பெண் போலீசார் ஒருவருக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கு கூட உரிய பாதுகாப்பு இல்லை. திமுக நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டாம். காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுகவால் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டும். இந்த 18 மாதங்களில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு எதனையும் செய்யவில்லை.
தற்போது உள்ள சூழலில் பல்வேறு ஊடகங்கள் திமுக அரசை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த ஊடகங்கள் கைவிட்டால் திமுகவினர் போய்விடுவார்கள்.
தற்பொழுது, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமைகளாக உள்ளன. திமுக எது கூறினாலும், உதாரணத்திற்கு குட்டிக்கரணம் போட சொன்னாலும் குட்டிக்கரணம் போடுகின்றனர்.
மேலும் திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது, எனக் கூறினார்.