கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் – நாளை மறுநாள் நடக்கிறது!!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் – நாளை மறுநாள் நடக்கிறது!!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply