கொடுத்த வாக்குறுதி என்னானது .. எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குக…டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட நர்ஸ்கள்…

கொடுத்த வாக்குறுதி என்னானது .. எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குக…டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட நர்ஸ்கள்…

சென்னை: 

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற செவிலியர்களை தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்வதற்கும், தற்காலிக அடிப்படையில் இல்லாமல் , தங்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தினர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தை இன்று (ஜன.4) முற்றுகையிட்டனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 2ஆம் அலையின்போது, இறப்புகள் உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே எம்ஆர்பி தேர்வில் தகுதிப் பெற்று காத்திருந்தவர்களை பணியில் நியமனம் செய்தனர். அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கி ஊதியம் வழங்கி வந்தனர்.

திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கரோனா தொற்றை சமாளிப்பதற்காக இவர்களைத் தொடர்ந்து பணியில் அனுமதித்தனர். இந்த நிலையில், ‘கரோனா தொற்று காலத்தில் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி உடன் பணியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தேசிய சுகாதாரத்திட்டதின் கீழ் பணி வழங்கப்படும்’ என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ இயக்க வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் விஜயலட்சுமி கூறும்போது,

‘திமுகவின் தேர்தல் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறினர்.

கரோனா காலத்தில் விதிமுறைகளின்படி நியமனம் செய்ப்பட்ட தங்களை பணி நீக்கம் செய்துள்ளனர். எங்களுக்கு ஏற்கனவே பெற்ற ஊதியத்தைவிட கூடுதலாக ஊதியம் அளிப்பதாக கூறினாலும், பணி நிரந்தரம் என்பது கிடையாது. தற்போது பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுப் பணி என்பதும் ஒரு தற்காலிகப் பணி தான்.

அடுத்த 11 மாதங்கள் கழித்து மீண்டும் எங்களுக்கு பணி வாய்ப்பு கேட்டு போராடக்கூடிய ஒரு நிலையில் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர் ரேஷ்மா கூறும்போது, ‘கரோனா காலத்தில் எம்ஆர்பி தேர்வினை எழுதி காத்திருந்தவர்களை பணிக்கு தேர்வு செய்தனர். கரோனாவின்போது எங்கள் உயிர் குறித்தும் அச்சம் இல்லாமல் பணி புரிந்தோம்.

பணியின்போது சரியாக சாப்பிட முடியாமலும், இயற்கை உபாதைகளை செய்ய முடியாமலும், குழந்தைகள், குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க முடியாமலும் பெரிதும் அவதிப்பட்டு பணியாற்றினோம்.

ஆனால், கரோனாவின்போது எங்களது பணியைப் பெற்ற அரசு தற்பொழுது எங்களைப் பணி நீக்கம் செய்கிறது. எனவே, எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply