யோகானந்தர் – ஓர் ஒப்பற்ற மகான்…

கோவை:
ஜனவரி 5, 2023 ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரது 130 வது அவதார தினம் ஆகும். அன்பின் திரு உருவான இந்த மகான் தனது ஆன்ம கீதங்கள் என்ற நூலில் “இறை நிலையை எய்தாது விடுபட்ட ஓர் உடன் பிறவா உடன் பிறப்பு உள்ள வரை நான் பல கோடி முறை மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்கு வருவேன்!” என உறுதி மொழி தந்துள்ளார் .
“ஒரு யோகியின் சுயசரிதம்” என்ற இவரது ஒப்புயர்வற்ற நூல்தான் இந்திய யோக விஞ்ஞானத்தின் மீது உலகளாவிய ஆர்வத்தைத் தூண்டியது என்றால் அது மிகையாகாது. இவர் “யோகத்தின் தந்தை” என்று மேலை நாடுகளில் போற்றிப்
புகழப்படுகின்றார்.
யோகானந்தர் 1893 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் தேதி, கோரக்பூரில், பகவதி சரண் கோஷ் மற்றும் ஞானப் பிரபா தம்பதியருக்கு கருவிலேயே திருவருள் பெற்ற தவப் புதல்வனாய் தோன்றினார்.இவருக்கு முகுந்த லால் கோஷ் என இவரின் பெற்றோர்கள் பெயர் சூட்டினர். தங்களின் தெய்வக் குழந்தையை காசியில் வாழ்ந்த மகான் லாஹரி மகாசயரிடம் ஆசி பெற அழைத்துச் சென்றனர்.
அந்த யோகி அக்குழந்தையைத் தனது மடியில் கிடத்தி ,”இளம் தாயே, உங்கள் மகன் ஒரு யோகியாவான். ஆன்மீக ஆற்றலால் அவன் அனேக ஆன்மாக்களை இறைவனின் பேருலகிற்கு கொண்டு செல்வான்.” எனக் கூறி ஆசி வழங்கினார்.
இளமையிலேயே இறை நாட்டம் கொண்ட முகுந்தன் இறை அனுபூதி எய்துவதையே தனது இதயத்தின் மிக உயர்ந்த ஒரே லட்சியமாய்க் கொண்டு அதனை ஈடேற்ற வல்ல ஒரு குருவை இடையறாது தேடினார். . சீடன் தனது குருவைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த
போது, மரணமற்ற குருவான மகாவதார பாபாஜியால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பமேளாவில் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சீடருக்காகக் குருவும் காத்திருந்தார். இறுதியாக ஒரு சிறப்புமிகு தருணத்தில் முகுந்தன் ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியின் காந்த விளிம்பிற்குள் இழுக்கப்பட்டார்.குரு- சீடன் சந்திப்பு நிகழ்ந்து.எப்பொழுதும் நிலை பிறழா, ஞானமே வடிவெடுத்த யுக்தேஸ்வர் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடன் திரும்பத் திரும்பக் கூறினார்.
“ஓ, எனக்கே உரியவனே, நீ என்னிடம் வந்து விட்டாய்! உனக்காக எத்தனை ஆண்டுகளாகக் காத்து இருக்கின்றேன்!” அதைத் தொடர்ந்து ஒரு பத்தாண்டு காலம் குருவின் கீழ் கடுமையான பயிற்சி. பின்னாளில் முகுந்தனின் நெடுங்காலக் கனவு மெய்ப்பட்டது. கடுமையான உழைபப்பின் பலனாக துறவித்துவம் அருளப்பெற்று முகுந்தன் யோகானந்தர் ஆனார். தெய்வீக ஐக்கியம் (யோகம்) மூலம் ஆனந்தம் (ஆனந்தம்) எய்தினார்.
இளைஞர்களின் முழுமையான வளர்ச்சியே அவரது இலட்சியம். அதுவே அவரது இதயத்திற்கு மிக அண்மையில் இருந்ததால், யோகானந்தர் 1917 ஆம் ஆண்டில் ஏழு சிறார்களுடன், பீஹாரில் உள்ள திஹிகாவில் சிறுவர்களுக்கான பள்ளி ஒன்றை நிறுவினார். ஓர் ஆண்டு கழித்து ராஞ்சியில் உள்ள காசிம்பஜார் அரண்மனை கல்விக்கான இந்த சாதக முயற்சியின் தளமாக மாறியது.
இதுவே பின்னர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) வாக உருவெடுத்தது. இந்த ஆன்மீக அமைப்பின் முக்கியக் குறிக்கோள் “மனித இனத்தைத் தன்னுடைய பெரிய ஆன்மாவாகக் கருதி சேவை செய்தல்.” நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, காலத்தின் மாற்றங்களால் நிலை தளராமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரமங்கள் மற்றும் தியான மையங்களுடன், இந்த ஆன்மீக அமைப்பு வலுவாக ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி நிற்கின்றது.
1920 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச சமய மிதவாதிகளின் மகாசபைக்கு இந்தியப் பிரதிநிதியாக மகான் யோகானந்தர் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஸெல்ஃப் –ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF), என்ற ஆன்மீக அமைப்பை லாஸ் ஏஞ்ஜலீஸை அதன் தலைமையகமாக அமைத்து நிறுவினார். அவரது போதனைகளின் மையமாக தியான உத்திகளின் சக்திவாய்ந்த ஓர் அங்கமாக கிரியா யோக தியான விஞ்ஞானம் உள்ளது. பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆன்மாவின் புராதன விஞ்ஞானம், சுய முயற்சியினாலும் இறைவனின் கருணையினாலும் உயர் ஆன்மீக உணர்வுநிலையை எய்த சக்திவாய்ந்த வழிமுறைகளை வழங்குகின்றது.
அதன் உள்ளார்ந்த பயன்பாடு உண்மையான வாழ்க்கை பற்றிய யோகானந்தரின் இலட்சியமான “வாழ்க்கைப் போர்க்களத்தில், ஒவ்வொரு மனிதரையும், ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒரு மாவீரனின் துணிச்சலுடன், ஒரு வெற்றியாளரின் புன்முறுவலுடன் எதிர்கொள்ளுங்கள்.” என்பதனை எதிரொலிக்கின்றது.
இல்லம் தேடி வரும் ஆன்மீகக் கல்வியை முதன் முதலில் உலகிற்கு அளித்த இந்த உத்தமரை இந்நாளில் நினைவு கூர்ந்து அவர் காட்டிய வழியில் சென்று உய்வு பெறுவோம் வாரீர்!
மேலும் தகவல்களுக்கு:
yssofindia.org
ஆங்கில மூலம்: சந்தியா நாயர்
தமிழாக்கம்: முகுந்தன்
9345314918.