ஆர்ப்பாட்டத்தின் போது தகாத வார்த்தைகளை பேசி அடித்துக்கொண்ட எடப்பாடி அணியினர் …

ஆர்ப்பாட்டத்தின் போது தகாத வார்த்தைகளை பேசி அடித்துக்கொண்ட எடப்பாடி அணியினர் …

கோவை :

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி முன்னிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவும், தொழில் வரியை ரத்து செய்யவும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், வால்பாறை பூங்கா, படகு இல்லத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக தொழிற்சங்க நிர்வாகியும் கூட்டுறவு வங்கி தலைவருமான அமீது கோஷ்டிக்கும், அதிமுக நகர செயலாளர் மயில்கணேஷ் கோஷ்டிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் ஒரு வேனில் நடைபெற்ற நிலையில், அந்த வாகனத்தில் ஏற முயன்ற அமீதுவை கீழே தள்ளி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கோஷ்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செருப்பை தூக்கி இரு தரப்பினரும், மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் வேனில் நின்ற அதிமுக நிர்வாகி ஒருவர் செருப்பை தூக்கி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கடுமையாக கெட்ட வார்த்தைகளைப் பேசி மோதிக்கொண்டதால் சிறிது நேரம் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஈபிஎஸ் அணிக்குள்ளேயே இரு பிரிவினராகப் பிரிந்து அடித்துக்கொண்டது அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Leave a Reply