ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்!!

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்!!

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

சாளகிராமங்களில் சுதர்சன சாளகிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளகிராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு…ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும். வியாழக்கிழமை விரதம் இருந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

பிரம்மோற்சவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகா முனியால் ஏற்படுத்தப்பட்டவை.

சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

Leave a Reply