உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு!!

புதுடெல்லி:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 75.56 சதவீதத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதி போட்டிக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலியா 15 டெஸ்டில் 10 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 136 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அடுத்து இந்திய மண்ணில் 4 டெஸ்டில் விளையாடுகிறது. 4 டெஸ்டில் தோற்றால் ஆஸ்திரேலியாவின் சதவீதம் 59.65 ஆக குறையும். ஏதாவது ஒரு டெஸ்டில் டிரா செய்தாலே அந்த அணி இறுதி போட்டிக்கு நுழைந்து விடும்.

மேலும் 4 டெஸ்டிலும் தோற்றாலும் இலங்கை-நியூசிலாந்து போட்டியை பொறுத்து முடிவு இருக்கும். ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி 14 டெஸ்டில் 8 வெற்றி 4 தோல்வி, 2 டிராவுடன் 99 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளிகள் 58.93 ஆகும். வங்காள தேசத்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-0, 3-1 அல்லது 3-0 என்று கைப்பற்றினால் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒரு வேளை 2-0, 2-2 என்ற கணக்கில் முடிந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இதே போல இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் போட்டியில் உள்ளன. இலங்கை அணி 5 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 64 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளியில் 53.33 ஆக உள்ளது. அந்த அணி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 13 டெஸ்டில் 6 வெற்றி, 6 தோல்வி, 1 டிராவுடன் 76 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 48.72 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்னும் 3 டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை இறுதி போட்டியை நிர்ணயிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் இந்த தொடர் நடக்கிறது. இலங்கை-நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்டில் விளையாடுகிறது.

Leave a Reply