சுவையான சொதி செய்யலாமா?

சுவையான சொதி செய்யலாமா?

உணவு ருசியாக இருந்தால் உண்ணுதல் ஒரு பேரணுபவம் தான். பசிக்கு உண்டால் போதுமென்றாலும் எப்போதாவது ருசிக்காக தேடித் தேடி அல்லாது சற்று பிரமாண்டமாக உண்ணுதல் குற்றமல்ல. அதனால் எளிமையை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நிறைய நேரம் இருக்கும் போது இந்த திருநெல்வேலி சொதியை செய்து சாப்பிடலாம்.

முதலில் தேவையான பொருட்களைப் பார்த்துவிடுவோம்..

பாசிப்பருப்பு – 100 கிராம், நறுக்கிய பீன்ஸ்,
கேரட், உருளைக்கிழங்கு – 1 கப்,
முருங்கைக்காய் – 1,
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்,
தேங்காய் துருவல் – 1 கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 6 பல்,
பச்சை மிளகாய் – 5,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவைக்கு.

சொதிக்கு சுவை தருவதே தேங்காய்ப் பால் தான். அதனால் முதலில் தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதுஒருபுறம் இருக்க பாசிப் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும். அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும். அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளையும் சேர்த்து வேக வைக்கவும்.

நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.

பிறகு முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து நுரை பொங்கி வந்து இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

தேங்காய்ப் பால் பதம், எந்த பாலை எப்போது சேர்க்க வேண்டும் என்ற முறை தான் சொதியின் ரகசியம். அதனால் நல்ல நெத்து தேங்காயை தேர்வு செய்து பால் எடுக்கவும்.

இந்த சொதி குழம்பை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எனப் பல பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். காய்கறிகள், தேங்காய்ப் பால் என நிறைய ஊட்டச்சத்து இருப்பதால் இந்த சொதி உடலுக்கு ஊட்டச்சத்துகளை நிறைவாகத் தரும்.

Leave a Reply