உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் !!

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் !!

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பழனியில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணி தொடங்கியது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தொய்வடைந்தது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், ஸ்தபதி மற்றும் ஆன்மிக சான்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த சிலை பாதுகாப்பு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று மூலவர் சிலையை பார்வையிட்டனர். தற்போது பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு பழனி முருகன் கோவிலுக்கு திடீரென்று வந்தனர். பின்னர் கருவறை பகுதியில் உள்ள மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழனியில் நடந்த இந்த திடீர் ஆய்வால் மூலவருக்கு மருந்து சாத்துவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள், ஆன்மிக பெரியோர்களிடையே நிலவுகிறது.

Leave a Reply